Monday, 14 May 2018

அரசுப் பள்ளி மாணவர்களின் தங்கத் தருணங்களைச் சொல்லும் குறும்படம்!

அரசுப் பள்ளி என்பது ஏற்றத் தாழ்வற்று, அனைத்து மாணவர்களும் ஒன்றாக கல்வி பெறுவதற்கான அற்புதமான இடம். இன்று, மிகப் பெரிய பதவிகளில் இருக்கும் பலரும் அரசுப் பள்ளியில் படித்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம், தங்கள் பள்ளி வாழ்க்கையைப் பற்றி கேட்டால் மணிகணக்கில் சிலாகிப்பார்கள். அந்தப் பருவத்தில் உருவான நட்பு என்பது நெடுங்காலத்துக்கு தொடந்துவரும். அதெல்லாம் சரி. அதை ஏன் இப்போது சொல்கிறேன் என கேட்கிறீர்களா?


இப்போதும் அரசுப் பள்ளியில் நெகிழ்வான தருணங்களுக்குப் பஞ்சமில்லை. அந்த அழகான தருணங்களையும், கூடுதலாக அருமையான செய்தியையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு குறும்படம் வெளியாகியுள்ளது. கூர்ப்பி - ஷார்ப்பனர் என்பதன் தமிழ்ப் பெயர்.


இந்தக் குறும்படம், நம்மை புதுக்கோட்டை மாவட்டம், ஒடப்பவிடுதி அரசு நடுநிலைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு நான்காம் வகுப்பு படிக்கும் முகிலா எனும் மாணவிக்கு மந்திரக் கூர்ப்பி ஒன்று கிடைக்கிறது. அந்தக் கூர்ப்பியில் பென்சிலைத் துருவும்போது நாம் என்ன கேட்கிறோமோ அந்த உருவத்தைத் தரும். உதாரணமாக, குடை எனக் கேட்டு பென்சிலைத் துருவினால், பென்சிலின் துருவல் குடை வடிவத்தில் கிடைக்கும். ஆனால், 24 மணிநேரத்தில் ஒரு முறையாவது இந்தக் கூர்ப்பியைப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், கூர்ப்பியின் மந்திரத் தன்மை அதை விட்டு விலகிவிடும். இந்தக் கூர்ப்பியால் முகிலாவை மாணவர்கள் எப்போதும் சூழ்ந்துகொள்கிறார்கள்.




முகிலாவும் மாணவர்கள் கேட்கும் வடிவங்களை உருவாக்கித் தருகிறாள். ஒரு நாள் இரவு, வீட்டில் முகிலா படித்துக்கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைபட்டு, ட்யூப் லைட் அணைந்து விடுகிறது. மண்ணெண்ணெய் விளக்கு எடுத்து வைக்கிறார் முகிலாவின் அம்மா. அப்போது இருட்டில் கூர்ப்பியை அம்மா உதைத்துவிடுவதால், பாத்திரத்தின் இடுக்கில் அது மாட்டுக்கொள்கிறது. எவ்வளவு தேடியும் முகிலாவால் கூர்ப்பியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


மறுநாள் பள்ளிக்குச் செல்லும் முகிலாவிடம் நண்பர்கள் வழக்கம்போல உருவங்களை வரவழைக்க கேட்கிறார்கள். தான் கூர்ப்பியை வீட்டில் மறந்து வைத்துவிட்டதாக கூறுகிறாள். அடுத்த நாளும் கூர்ப்பி இல்லாமல் பள்ளிக்குச் செல்ல, முகிலாவிடம் முன்பு போல ஒட்டாமல் பழகுகிறார்கள் நண்பர்கள். அன்று மாலை வீட்டுச் செல்லும்போது, கூர்ப்பியைக் கண்டுபிடித்து அவளின் அம்மா தருகிறார். ஆனால், அது மந்திரத் தன்மையை இழந்துவிடுகிறது. ஆனால், கூர்ப்பி முகிலாவுக்கு சூப்பரான ஒரு ஐடியாவைக் கொடுக்கிறது. அது என்னவென்று நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


கூர்ப்பி குறும்படம் அதில் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கச் சொல்கிறது. மந்திரங்கள் நிரந்தமல்ல... அல்லது மந்திரத்தால் ஏதும் சாத்தியமில்லை, விருப்பமும் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் படைப்பாற்றலை உருவாக்கி, வளர்த்துக்கொள்ள முடியும் என்கிறது கூர்ப்பி குறும்படம். முகிலாவாக நடித்திருக்கும் லக்‌ஷ்யா எனும் மாணவி காட்சியை உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார்.




கதை ஒரு புறம் சென்றாலும் ஓர் அரசுப் பள்ளியின் அழகான தருணங்கள் காட்சிப் படுத்தியிருக்கும் விதம் பார்வையாளர்களை பழைய பருவத்துக்கே அழைத்துச் செல்கிறது. ஹோம் வொர்க் ஏன் செய்யவில்லை என மாணவியிடம் கேட்கும் ஆசிரியர், பிரேக் டைமில் டயர் வைத்து விளையாடுவது என பள்ளியின் நடுவே நாம் பயணிக்க வைக்கிறது. இன்னுமொரு காட்சியில், முட்டையுடன் சத்துணவு கொடுக்கப்படுகிறது. அதை ஒரு மாணவன் எடுத்து வரும்போது தட்டிலிருந்து முட்டை மண்ணில் விழுந்துவிடுகிறது. இதைக் கவனித்த ஒரு மாணவி தன் தட்டிலிருக்கும் முட்டையின் பாதியை அந்த மாணவனின் தட்டில் வைக்கிறாள். இதுபோல படம் முழுக்க நெகிழ்வான காட்சிகள் இருக்கின்றன.


ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர் சாமியப்பன் எழுதிய கதையை எம். வெங்கடேசன் சிறப்பாக இயக்கியிருக்கிறார். ச.ஹரிஹர சுதன் இயல்பான காட்சிகளாக ஒளிப்பதிவு செய்துள்ளார். பள்ளியில் மாணவர்களின் சத்தம் படம் முழுக்க வருகிறது. அது நம்மை படத்துடன் ஒன்றச் செய்கிறது. படத்தின் 18 நிமிடங்கள். இவ்வளவு நீளம் தேவையில்லை என்றே தோன்கிறது. ஏழு அல்லது எட்டு நிமிடங்களில் இந்தக் கதையை இன்னும் அழுத்தமாக பதிய வைத்துவிட முடியும்.


கதையாசிரியர் சாமியப்பனிடம் பேசியபோது, "இந்தப் படம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளது. லக்‌ஷ்யாவின் இவ்வளவு அழகாக நடிப்பாள் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. தான் நடித்ததை காட்டச் சொல்லிப் பார்ப்பாள். சரியில்லை என்றால் அவளே இன்னொரு முறை நடித்த காட்சிகள் இருக்கின்றன." என்கிறார்.


நல்ல கதையைக் கொண்டு நல்ல முயற்சியை மேற்கொண்ட இந்தப் படக் குழுவின் பயணம் வெல்லட்டும். அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பணியில் தொடர்ந்து ஈடுபடட்டும்.


படத்தைப் பார்க்க: https://youtu.be/SOtEHuKibQU



No comments:

Post a Comment